குழந்தையை மடியில் வைத்திருந்த போது பெண்ணை சரமாரியாக வெட்டி கொடூரமாக கொன்ற வழக்கில் கணவன்–மனைவிக்கு தூக்கு தண்டனை விதித்து நெல்லை கோர்ட்டு நேற்று பரபரப்பு தீர்ப்பு கூறியது.

காதல் ஜோடி ஓட்டம்
நெல்லை வண்ணார்பேட்டை இளங்கோ நகரைச் சேர்ந்தவர் சண்முகநாதன். அவருடைய மகள் கல்பனா (வயது 32). மகன் விசுவநாதன் (25). இதில் விசுவநாதன் நெல்லை அருகே ரெயில்வே கேட் கீப்பராக வேலை செய்து வருகிறார்.

இவருக்கும், தச்சநல்லூர் மங்களா குடியிருப்பை சேர்ந்த தலையாரி சங்கரநாராயணன் என்பவருடைய மகள் காவேரிக்கும் (24) பள்ளிக்கூடத்தில் படிக்கும் போதே காதல் ஏற்பட்டுள்ளது. காவேரி என்ஜினீயரிங் படிப்பை முடித்து விட்டு வீட்டில் இருந்து வந்த நிலையில், இந்த காதல் விவகாரம் பற்றி காவேரி வீட்டில் தெரியவந்தது.

காவேரியும், விசுவநாதனும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் காவேரியின் வீட்டு காதலுக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. பெற்றோர் எதிர்ப்பையும் மீறி கடந்த ஆண்டு மே மாதம் விசுவநாதனும், காவேரியும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். பின்னர் வெளியூரில் அவர்கள் வசித்து வந்தனர்.

பெண் கொடூர கொலை
காவேரி தன்னுடைய காதலனை திருமணம் செய்து கொண்டதை அறிந்த அவருடைய தந்தை சங்கரநாராயணன் ஆத்திரம் அடைந்தார். இந்த திருமணத்துக்கு விசுவநாதனின் அக்காளான கல்பனாதான் உதவினார் என்று அவரை பழிதீர்க்க சங்கநாராயணன் முடிவு செய்தார்.

கல்பனாவின் வீடு நெல்லை வண்ணார்பேட்டை இளங்கோ நகரில் உள்ளது. கணவர் சற்குணம், 1½ வயது குழந்தை துரை தீபக் ஆகியோருடன் அந்த வீட்டில் கல்பனா வசித்து வந்தார். அங்கு சென்று விசாரித்தால் காதலனுடன் மகள் காவேரி இருக்கும் இடத்தை அறியலாம் என்று நினைத்து சங்கரநாராயணன் வந்து கேட்டுள்ளார்.

இந்த நிலையில் 13.5.2016 அன்று மதியம் மீண்டும் கல்பனாவின் வீட்டுக்கு சங்கரநாராயணன் சென்றார். அங்கு கல்பனா தனது குழந்தை துரை தீபக்கை மடியில் வைத்து விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அவருடைய கணவர் சந்குணம் வீட்டில் இல்லை.

கல்பனாவிடம் ஆவேசமாக பேசிய சங்கரநாராயணன், அவரது மடியில் இருந்த குழந்தை துரை தீபக்கை இழுத்து போட்டுவிட்டு அரிவாளால் கல்பனாவை சரமாரியாக வெட்டினார். ரத்த வெள்ளத்தில் அவர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த போது சங்கரநாராயணன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

தாய் குற்றுயிராக கிடந்ததை பார்த்து குழந்தை கதறியது. அந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து கல்பனாவை அருகில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் பரிதாபமாக இறந்துவிட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக பாளையங்கோட்டை போலீஸ் உதவி கமி‌ஷனர் விஜயகுமார் வழக்குப்பதிவு செய்தார். கொலையை கண்டித்து இளங்கோநகர் பகுதியைச் சேர்ந்த மக்கள் வண்ணார்பேட்டை வடக்கு பை–பாஸ் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டார்கள். இந்த கொலை வழக்கில் சங்கரநாராயணன் (52), அவருடைய மனைவி செல்லம்மாள் (48) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதில் செல்லம்மாளின் தூண்டுதலின் பேரில்தான் இந்த பயங்கர சம்பவத்தை சங்கரநாராயணன் அரங்கேற்றினார் என விசாரணையில் தெரியவந்தது.

கல்பனா கொலை வழக்கின் விசாரணை நெல்லை மாவட்ட 2–வது கூடுதல் செசன்சு கோர்ட்டில் (வன்கொடுமை தடுப்பு) நடந்தது. வழக்கு மீதான குற்றப்பத்திரிகை கடந்த ஆண்டு ஆகஸ்டு 17–ந் தேதி கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. நீதிபதி அப்துல் காதர் வழக்கை விசாரித்தார். மொத்தம் 17 பேர் சாட்சிகளாக விசாரிக்கப்பட்டனர்.

தூக்கு தண்டனை
இதையொட்டிகல்பனா கொலை வழக்கில் சங்கரநாராயணன், செல்லம்மாள் ஆகிய 2 பேரும் குற்றவாளிகள் என்று நேற்று முன்தினம் நீதிபதி தீர்ப்பளித்தார். தண்டனை விவரத்தை மறுநாள் (அதாவது நேற்று) அறிவிக்கப்படும் என்றும் நீதிபதி அறிவித்திருந்தார்.

சங்கநாராயணன், செல்லம்மாள் ஆகியோருக்கான தண்டனை என்ன?

குற்றவாளிகள் 2 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். அப்போது நீதிபதி அப்துல் காதர், சங்கரநாராயணன், செல்லம்மாள் ஆகியோருக்கு தூக்கு தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார்.

இதையடுத்து சங்கரநாராயணன் பாளையங்கோட்டை மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டார். செல்லம்மாள் திருச்சி ஜெயிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

சாலை மறியல்
இந்த சம்பவத்தை கண்டித்து இளங்கோ நகர் பகுதி மக்கள் வண்ணார்பேட்டை வடக்கு பை–பாஸ் ரோட்டில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். போலீஸ் அதிகாரிகள் அவர்களை சமாதானப்படுத்தி குற்றவாளிகளை உடனடியாக கைது செய்வதாக உறுதி அளித்தனர்.

செய்தியை நண்பர்களுடன் பகிருங்கள்