அமைச்சர் திகாம்பரத்தின் ஆதரவாளர்களுக்கும் ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமானின் ஆதரவாளர்களுக்கும் இடையிலான மோதல் சம்பவம் தொடர்பிலான வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த மோதல் சம்பவம் தொடர்பிலான வழக்கு எதிர்வரும் நவம்பர் மாதம் 21 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

2013 ஆம் ஆண்டு மத்திய மாகாண சபை தேர்தலின் போது கொட்டகலை மற்றும் கினிகத்தேனை பகுதிகளில் வைத்து இவ்விரு குழுவினருக்கும் இடையில் மோதல் சம்பவம் இடம்பெற்றது.

இந்தச் சம்பவம் தொடர்பில் கினிகத்தேனை பொலிஸாரும் ஹட்டன் பொலிஸாரும் இணைந்து ஹட்டன் மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கு இன்று திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, பதில் நீதவான் கருணாகரன் வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.

இந்த வழக்கு விசாரணையின் போது, அமைச்சர் பழனி திகாம்பரம் ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் ஆகியோர் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தனர்.

இதேவேளை, மத்திய மாகாண விவசாய அமைச்சர் எம். ராமேஸ்வரன் மாகாண சபை உறுப்பினர்களான எம். உதயகுமார், சக்திவேல், எம். ராமசாமி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பீ. ராஜதுரை உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

செய்தியை நண்பர்களுடன் பகிருங்கள்